அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மொட்டன்ஸ்ரூட் வளாகத்தில் நடந்தது என்ன? நடப்பது என்ன?
மொட்டன்ஸ்ரூட் வளாக நிருவாகத்தால் 12.09.2026 சனிக்கிழமை அன்று பாடசாலை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்ட பின்பும், உள்ளூரிலிருந்து சிலரும் வேறு இடங்களிலிருந்து சிலரும் பாடசாலைக் கட்டிடத்தில் பெற்றோரையும் ஆசிரியரையும் சில மாணவர்களையும் அழைத்து, அனுமதியின்றி நடத்தப்பட்ட சந்திப்பினால் பறிபோன பாடசாலைக் கட்டிடம்!
அன்று தமிழர் வள ஆலோசனை மையக் கட்டிடத்தில் அனுமதியின்றி, அத்துமீறி பூட்டுடைத்து, உள்நுழைய முன்னின்று செயற்பட்ட சில முக்கிய நபர்களின் பங்களிப்பு!
விரிவான விளக்கம்!
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனைத்து வளாகங்களுக்கும் நலன்விரும்பிகளுக்குமான அதிகாரபூர்வத் தகவல்!
அன்புடையீர்,
மொட்டன்ஸ்ரூட் வளாகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சூழ்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. இந்நிலையில், அன்னைத் தலைமை நிர்வாகத்தின் பதிவுகள், அதிகாரபூர்வ தகவல் பரிமாற்றங்கள் மற்றும் எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உண்மை நிலையை ஏனைய அனைத்து வளாகங்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.
12.09.2026 அன்று பாடசாலை நடைபெறாது என வளாக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற நடவடிக்கைகள்!
மொட்டன்ஸ்ரூட் வளாக நிர்வாகத்தினால் 12.09.2026 அன்று தமிழ்ப்பாடசாலை நடைபெறாது என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பில்,
“அக மற்றும் புறச்சூழல் காரணங்களால், 12.09.2026 அன்று நடைபெறவிருந்த தமிழ்ப்பாடசாலை வகுப்புகள் நடைபெறமாட்டாது.”
எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையிலும், சிலர் நோர்வேஜிய பாடசாலை வளாகத்தில் வேறு ஏற்பாடுகளின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பெற்றோர்களையும் மாணவர்களையும் அங்கு அழைத்துச் சென்று, கட்டிடத்தின் வேறு பகுதிகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், தாமே இனி பாடசாலையை நடத்தவுள்ளதாகக் கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், இதற்கான முன்னேற்பாடுகளாக SPOND குழுமம் உருவாக்கப்பட்டு, அதில் பெற்றோர்களுடன் வேறு சிலரும் இணைக்கப்பட்டிருந்தனர். வேறு இடங்களிலிருந்தும் சிலர் 12.09.2026 சனிக்கிழமை அன்று மொட்டன்ஸ்ரூட் பாடசாலைக் கட்டிடத்திற்கு வருகை தந்ததாகவும் அறியப்படுகிறது.
இயங்குநிலையிலிருந்த நிர்வாகம், தன் விலகல் செய்தியை அறிவிக்கும் போது, பெற்றோருடன் இருந்துவந்த தொடர்பாடல் தளமான மொட்டன்ஸ்ரூட் SPOND குழுமத்தில் அன்னைத் தலைமை நிர்வாகத்தை இணைத்திருக்க வேண்டும். ஆனால் அது இங்கு இடம்பெறவில்லை என்பதும் வருந்தத்தக்க ஒரு விடயமாகும்.
இச்சம்பவமானது, முன்பு ஒருநாள் தமிழர் வள ஆலோசனை மையத்தில், அனுமதியின்றி கதவுப்பூட்டுக்களை உடைத்து உள்நுழைந்து கூட்டங்களை நடத்திய சம்பவங்களுடன் ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது.
ஒரு நோர்வேஜிய பாடசாலைக் கட்டிடத்திலும் முன் அனுமதி மற்றும் தெளிவான ஒப்பந்த ஏற்பாடுகள் இன்றி இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்று தமிழர் வள ஆலோசனை மையக் கட்டிடத்தில் அனுமதியின்றி உள்நுழைய முன்னின்று செயற்பட்ட சில நபர்கள் இதிலும் பங்கெடுத்துள்ளனர். அத்துடன் இதில் ஒருவர் நோர்வேஜிய பாடசாலையில் பணியாற்றி வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திடீரென ஏற்பட்ட நிர்வாக மாற்றம்!
11.09.2026 வெள்ளிக்கிழமை இரவு சுமார் 21.00 மணியளவில், மொட்டன்ஸ்ரூட் வளாக நிர்வாகத்தில் பணியிலிருந்த இரு உறுப்பினர்கள் தமது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு முதல் கிழமை வளாகத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவரும் விலகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 11.09.2026 இரவு 22.15 மணியளவில், இயங்குநிலையில் இருந்த பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு, மாணவர்களின் கல்வி மறுநாள் தடைப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அன்னைத் தலைமை நிர்வாகம் நேரடியாக வந்து தேவையான உதவிகளை வழங்க வருகிறோம் எனத் தெரிவித்தது.
எனினும், 12.09.2026 சனி அதிகாலை 00.52 மணியளவில், அன்னைத் தலைமை நிர்வாகத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல், அன்று பாடசாலை நடைபெறாது என வளாக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், இயங்குநிலையில் இருந்த நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்து நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்காக அன்னைத் தலைமை நிர்வாகம் முயற்சி மேற்கொண்டதுடன், தங்களது நிலைப்பாட்டை காலை 08.30 மணிக்கு முன்னர் உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டது.
ஆனால், 12.09.2026 காலை 08.27 மணியளவில், தற்காலிகமாக வளாகப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டவர் உட்பட மேலும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் தமது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அன்னைத் தலைமை நிர்வாகத்திற்கு அறிவித்தனர்.
இதனால், மொட்டன்ஸ்ரூட் வளாகத்தின் நிர்வாகச் செயற்பாட்டில் திடீர் மாற்றமும் குழப்பநிலையும் ஏற்பட்டது.
அன்னைத் தலைமை நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைகள்!
இத்தகைய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், அன்னைத் தலைமை நிர்வாகத்தின் முதன்மையான கவனம் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதுதான்.
அதற்காக:
- நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்து நிலைமையைத் தெளிவுபடுத்த முயற்சித்தோம்;
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்கான மாற்று நடவடிக்கைகளைத் தயார்படுத்தினோம்;
- பெற்றோர்களை நேரடியாகச் சந்தித்து நிலைமையை விளக்க முயற்சித்தோம்;
- எமது இணையத்தளம் மற்றும் குறுந்தகவல்கள் உள்ளிட்ட வழிகளின் ஊடாக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கினோம்.
எனவே, மொட்டன்ஸ்ரூட் வளாகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை மாற்றியமைத்து, சுமூகமான சூழலை உருவாக்க, அன்னைத் தலைமை நிர்வாகம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.¨
பாடத்திட்டம் மற்றும் பாடநூல் தொடர்பான தகவல் பரிமாற்றம்!
புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் தொடர்பான தகவல்கள் மொட்டன்ஸ்ரூட் வளாகத்திற்கு வழங்கப்படவில்லை என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அன்னைத் தலைமை நிர்வாகத்தின் பதிவுகளின்படி, 12.04.2026 முதல் புதிய பாடத்திட்டம், பாடநூல் மாற்றங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் தொடர்புடைய அறிவிப்புகள் புலனம் (WhatsApp), மின்னஞ்சல் மற்றும் இணையவழி (Teams) வழியாக மொட்டன்ஸ்ரூட் வளாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
வளாக நிர்வாக உறுப்பினர்கள், வளாகப் பொறுப்பாளர் மற்றும் கல்விப் பொறுப்பாளர் ஆகியோர் இத்தகவல்களைப் பார்த்துள்ளமைக்கான பதிவுகளும் உள்ளன.
மேலும், 09.08.2026 அன்று 5–11 ஆம் தரங்களுக்கான புதிய பாடநூல்கள் தொடர்பான தகவல்களும் உரிய முறையில் பகிரப்பட்டுள்ளன.
மொட்டன்ஸ்ரூட் ஆசிரியர்களும் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர். அவர்களது பங்களிப்புகளும் புதிய பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
எனவே, ஏனைய வளாகங்களைப் போல் தகவல்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு அன்னைத் தலைமை நிர்வாகத்தின் பல பதிவுகள் சான்றாக உள்ளன.
பாடநூல்கள் தொடர்பான நிலைமை!
பாடசாலை ஆரம்பித்த நாளில் மாணவர்களுக்குப் பாடநூல்கள் வழங்கப்படாதமை தொடர்பாகவும் அன்னைத் தலைமை நிர்வாகம் தொடர்ந்து விளக்கம் கோரியது.
ஒரு கட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் பாடநூல்கள் கிடைக்கவில்லை எனவும், பின்னர் அடுத்த வாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கு வேறுபட்ட காரணங்களும் முன்வைக்கப்பட்டன.
29.08.2026 அன்று அன்னை மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பின் இறுதியில், அன்றைய நாளே மாணவர்களுக்குப் பாடநூல்கள் வழங்கப்படும் என மொட்டன்ஸ்ரூட் நிர்வாகத்தினரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலைகளிலும், மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியே அன்னைத் தலைமை நிர்வாகத்தின் முதன்மையான கவனமாக இருந்தது.
13.09.2026 அன்று பாடசாலைக் கட்டிட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்!
இந்நிலையில், 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை 13.48 மணியளவில், கடந்த சுமார் 15 ஆண்டுகளாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் மொட்டன்ஸ்ரூட் வளாகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நோர்வேஜிய பாடசாலை நிர்வாகத்திற்கு, மொட்டன்ஸ்ரூட் வளாக நிருவாகத்தினரால் அதிகாரபூர்வ தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மொட்டன்ஸ்ரூட் வளாக நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தமது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தத்தை அன்றைய நாளிலிருந்து முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய மொட்டன்ஸ்ரூட் நிர்வாகம் அல்லது அன்னைத் தலைமை நிர்வாகம் பின்னர் புதிய ஒப்பந்தம் தொடர்பாகத் தொடர்புகொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் மொட்டன்ஸ்ரூட் வளாகமாக இயங்கி வந்த பாடசாலைக் கட்டிடத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இந்நடவடிக்கை, அன்னைத் தலைமை நிர்வாகத்துடன் முன்கூட்டியே கலந்துரையாடப்படாமல் எடுக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான முடிவாகும்.
இந்தத் தகவலின் அடிப்படையில், அதே நோர்வேஜியப் பாடசாலையுடன் அன்னைத் தலைமை நிர்வாகம் சந்தித்துப் பேசி, கட்டிடத்திற்கான புதிய ஒப்பந்தத்தைப் பெற முயற்சித்தது. அதற்கு நோர்வேஜிய பாடசாலை நிர்வாகம் கூறியதாவது: “தங்கள் நிறுவனத்தினர் கட்டிடத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவதாகத் தகவல் அனுப்பியிருந்தனர்; அவர்கள் அதை உங்களிடம் (நேரடியாக) ஒப்படைத்திருக்க வேண்டும். தங்களது முரண்பாடுகளை அவர்கள் உள்ளகமாகத் தீர்த்து முடிவு எடுக்க வேண்டும். இதில் குழப்பநிலை உள்ளதை நாங்கள் விளங்குகிறோம்; நாம் இதற்குள் தலையிட விரும்பவில்லை. எனவே, கட்டிடத்தின் பயன்பாட்டு அனுமதியை நாம் யாருக்கும் வழங்கமாட்டோம்” என உறுதியாகத் தெரிவித்தது.
அன்னைத் தலைமை நிர்வாகத்தின் தெளிவான நிலைப்பாடு!
இங்கு ஒரு விடயத்தை மிகவும் தெளிவாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்:
நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் என்பதற்காக அன்னைத் தலைமை நிர்வாகம் உடனடியாகச் செயற்பட்டது.
அதேவேளை, எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, சிலர் பெற்றோர்களிடமிருந்து கையொப்பம் திரட்டி, நோர்வேஜிய பாடசாலையுடன் தமது பெயரில் புதிய ஒப்பந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும், அன்னை நிறுவனத்திற்கு எதிரான கட்டமைப்பின் கீழ் பாடசாலையைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளைச் சிலர் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. இவை தொடர்பாக நோர்வேயின் அதிகாரபூர்வப் பதிவுகளிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயங்கள் அனைத்தும் தொடர்புடைய பதிவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உரிய முறையில் ஆராயப்பட வேண்டியவையாகும்.
மொட்டன்ஸ்ரூட் மாணவர்களின் கல்வி தொடரும்!
தற்போதைய நிர்வாகச் சூழ்நிலை காரணமாக மொட்டன்ஸ்ரூட் மாணவர்களின் தமிழ்க் கல்வி நிறுத்தப்படாது.
அன்னைத் தலைமை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இதனடிப்படையில்:
- மொட்டன்ஸ்ரூட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய பாடநூல்களுடன் கல்வியைத் தொடருதல்;
- ஆசிரியர்களை ஒருங்கிணைத்தல்;
- தேவையான நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்;
- தற்காலிகமாக இணையவழிக் கல்வியைத் தொடங்குதல்;
- பின்னர் இயன்றவரை மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் நேரடி வகுப்புகளை ஏற்பாடு செய்தல்;
விரும்பும் பெற்றோர்கள் தங்களுக்கு அருகாமையில் இயங்கும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் ஏனைய வளாகங்களில் தங்கள் பிள்ளைகளின் கல்வியைத் தொடரச் செய்தல்.
ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து வளாகங்களுக்கும் எமது வேண்டுகோள்!
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் என்பது தனியொரு வளாகத்தை மட்டும் சார்ந்த நிறுவனம் அல்ல. நோர்வே முழுவதும் உள்ள வளாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்புடன் தமிழ்க் கல்விப் பணியை முன்னெடுத்து வரும் ஒருங்கிணைந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
எனவே, ஒரு வளாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு முழு அன்னை நிறுவனத்தைப் பற்றியும் அவதூறுகளைப் பரப்புவோரின் செயல்களைப் புரிந்துணர்வுடன் எதிர்கொள்வது அனைவரது பொறுப்பாகும்.
அன்னைத் தலைமை நிர்வாகத்தின் முதன்மையான பொறுப்பு மாணவர்களின் கல்வியைப் பாதுகாப்பதும் தமிழ்க் கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதுமேயாகும்.
மொட்டன்ஸ்ரூட் மாணவர்களின் கல்வியும் தமிழ்மொழி வளர்ச்சியும் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அன்னைத் தலைமை நிர்வாகம் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளும்.
அனைத்து வளாகங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பொறுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு, மாணவர்களின் நலனை எப்போதும் முதன்மைப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது!
தமிழ்மொழிக் கல்வி தொடர வேண்டும்!
நன்றி.
«தமிழ் எங்கள் அடையாளம்»
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
தலைமை நிர்வாகம்
