வளாகக் கட்டமைப்பு

நோர்வே நாட்டில் எம் தாய்மொழியாம் தமிழ்மொழி தழைத்தோங்க இத்தேசம் எங்கும் பல கிளைகளைப் பரப்பி, பலநூறு இளவல்களை ஒருங்கிணைத்து, அவர்களின் தாய்மொழி அறிவையும் தமிழர் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கும் பணியை சிரமேற்கொண்டு செயற்படும் ஒரு நிறுவனமே அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் ஆகும்.

காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் நடைமுறை மாற்றங்களை இன்றைய நவீன உலகிற்கேற்ப செயல் வடிவம் கொடுத்து, எம் கலைக்கூடம் இயங்கி வருகின்றது.
எம்மோடு கரங்கோர்த்துப் பயணிக்கும் அன்புள்ளங்கள் வழங்கும் பேராதரவால் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து நின்று தன் பணிகளைத் தொடர்கின்றது. இப்பணி மேலும் சிறக்க ஒன்றிணைந்து செயற்படுவோம.;

நாம் தமிழர்கள் என்ற இனவுணர்வோடு வாழ்வதோடு, எமது தனித்துவங்களைத் தொலைத்து விடாது, அடுத்த தலைமுறையும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலைத் தானாகத் தாங்கிச் சென்று சிறப்பாக வாழ அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் ஆற்றும் பணி என்றும் அவசிய தேவையாகும்.

எம் தமிழினம் தொடர்ந்தும் தனித்துவமாக மிளிர்ந்து நிற்பதற்குத் தாய்மொழிக் கல்வியூடாக எம் பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களைத் தக்கவைக்கத் தேவையான அடிப்படைகளை அடையாளம் காட்டி, எம் இளவல்களை எமது பாரம்பரியம் வழுவாது வாழ்வதற்கும் அதேவேளை நோர்வீஜிய பெரும் சமூகத்தோடு சேர்ந்து வாழும் சமூக வாழ்வியல் இலக்கை நோக்கிய நகர்வுகளுக்கும் எமது கலைக்கூடம் தனது பணிகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பல பத்தாண்டுகளாக நோர்வே நாட்டில் தமிழ்மொழிக் கல்வியோடு கலை, பண்பாட்டையும் எம் பாரம்பரியங்களையும் அடுத்த எம் தலைமுறைக்குக் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படும் நிறுவனமாக ஆன்றோர், சான்றோர், நலன்விரும்பிகளின் பேராதரவுடன் தமிழர்கள் மத்தியில் உருவெடுத்துள்ள நிறுவனமே அன்னை பூபதி கலைக்கூடம் என்றால் மிகையாகாது.