“இணையர் வாழ்த்து”
தமிழ் மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்து எமது அடுத்த தலைமுறையினர்க்கு எடுத்துச் செல்லும் பாரிய பணியானது அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் பணிகளில் முதன்மையானதொன்றாகும். அந்த வகையில் நோர்வே வாழ் தமிழர்களாகிய நாம் எமது அடையாளத்தைத் தொடர்ந்து பேணிப்பாதுகாக்க “இணையர் வாழ்த்து” வழங்கும் பண்பின் ஊடாக தமிழ் அடையாளங்களை அழியாது தொடர ஆவன செய்ய முனைகிறோம்.
எமது இளையோர் திருமண பந்தத்தில் இணையும் வேளையில், எமக்கே உரித்தான எம் தமிழ் மொழியை வாழ்க்கைத் துணையோடு தாங்கி, நின்று தம் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் சூட்டித் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்து நிற்போம்.
திருமண பந்தத்தில் இணையும் இணையர்களை, அன்னைத் தமிழும் சுவையும்போல் இல்வாழ்வு சிறக்க அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் சார்பில் வாழ்த்தும் திட்டத்தைக் கொண்டுவருவதில் பெருமகிழ்வடைகிறோம். இத்திட்டமானது வாளகங்கள், நலன் விரும்பிகள் ஊடாக செயற்படுத்தப்பட இருக்கிறது. நோர்வேயில் திருமணபந்தத்தில் இணையும் தமிழர் அனைவரும் இத்திட்டத்தினூடாக வாழ்த்துகளைப் பெறஉள்ளார்கள். அத்தோடு நல்ல தமிழ்ப் பெயர்களை தேடித் தருவதற்கு ஏதுவாக ‘தேடி’ வடிவமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது என்பதனையும் மகிழ்வோடுஅறியத்தருகின்றோம்.
“தமிழ் எங்கள் அடையாளம்”
# அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் நோர்வே