புதிய சிந்தனைகளோடு தமிழ்க் கல்வி செய்வோம்!
புதிய கல்வி ஆண்டில்
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் புதிய கல்வி (2022) ஆண்டில் அடுத்துக்கட்ட வளர்ச்சிப்பாதையை நோக்கி சிந்திக்கின்ற இவ் வேளையில் எமது அன்னை நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் அன்புடன் வரவேற்பதில் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் பெருமகிழ்ச்சியடைகின்றது.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில், நிறைந்த கனவுகளோடும், புதிய பரிமாணத்தோடும் எமது அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் புத்துயிர் பெற்று எமது கல்வி வளர்ச்சிக்கான ஊட்டச்சத்தாய் உருவெடுத்து நிற்கின்றது. இதற்குக் காரணமானவர்கள் ஆசிரியர்களும் பணியார்களும்தான் என்பது யாவரும் அறிந்ததே!
கடந்த கல்வியாண்டில் தன்முனைப்போடும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடும் கற்றுக் கொண்டதையும் கடந்து, புதிய கல்வியாண்டில் உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும், தமது அறிவுவேருக்கு நீருற்றிக் கொள்ள ஆர்வமாக காத்திருக்கும் மாணவர்களையும், தமிழ்க்கல்விக்கு மென்மேலும் வலுசேர்த்து உலகத்தரத்தில் எமது அன்னையை முன்வரிசையில் அமரவைக்க அறப்பணியாற்றி வரும் ஆசிரியர்களையும் நிருவாகிகளையும் அன்போடு வரவேற்பதில் நாம் பெருமகிழ்வு கொள்கிறோம்!
உலகளவில் கல்விச் சூழலில் பல புதிய மாற்றங்கள் நடந்தேறுகிறது. எனவே நாமும் அதற்கேற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ளுதல் அவசியமாகின்றது. தமிழர் மரபு வழியில் நமது கல்வியை நவீன கல்வியியல் தரத்திற்கேற்றவாறு மாற்றியமைத்து நமது தமிழ்க்கல்வியை தரம் உயர்த்த நாம் கூடுதலாக உழைக்க வேண்டும். கற்பித்தலில், கற்றலில், புதிய அணுகுமுறையை கடந்த கல்வியாண்டிலிருந்து கையாளுகின்றோம். ஆனாலும் இன்னும் கூடுதலாக மெருகேற்ற முனையவேண்டும்.
இந்தக் கல்வியாண்டில் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் பல்வேறு செயல் திட்டங்களோடு அடியெடுத்து வைக்கிறது.