நோர்வே மன்னரின் புத்தாண்டு உரையின் தமிழாக்கம் 2020 – Den Norske Kongens nyttårstale på tamilsk- 2020
இன்று மாலை Gjerdrum பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் முதலில் என் உணர்வு பூர்வமான அனுதாபங்களை தெரிவிக்கிறேன். கொடூரமான இச்சம்பவம் நம் அனைவருக்கும் ஆழமான சோகத்தை ஏற்படுத்துகிறது.
வீடுகளை இழந்தவர்கள், மனமுடைந்து போனவர்கள், முன்னோக்கி செல்லும் வழியைக் காணவில்லை, என எண்ணுபவர்கள் மற்றும் துக்கத்துடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் புதிய ஆண்டுக்குள் நுழையும் உங்கள் அனைவரின் மீதும் நான் அனுதாபம் கொள்கிறேன்.
அதே நேரத்தில், அதிகாரிகள், அவசர பணிச் சேவையாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரை, மிகவும் நெருக்கடியான நிலைமைகளின் கீழ் அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சிகளுக்காகப் பாராட்ட விரும்புகிறேன். உங்களின் கடின உழைப்பு இன்னும் நிறையப் பேருக்கு தேவைப்பட வேண்டி வரலாம். தேவைப்படும் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என மக்கள் அணிதிரண்டு வந்ததை மீண்டும் ஒரு முறை நாம் காண்கிறோம். இது எனக்கு பெருமையையும் மற்றும் நல் உணர்வையும் தருகிறது.
பலரை பாதித்த இந்த பேரழிவு, ஆண்டின் இறுதியில் வந்தது, நம் அனைவருக்கும் கடினமாக உள்ளது.
அதனால்தான், இந்த புத்தாண்டு தினத்தன்று – Svalbard முதல் Lindesnes(வட நோர்வேயிலிருந்து தெற்கு) வரை, மேற்கில் உள்ள கடலோர சமூகங்கள் முதல் கிழக்கின் எல்லை கிராமங்கள் வரை வாழும் நம் மக்கள் அனைவருக்கும் என் அன்பான உணர்வுகளை தெரிவிக்கிகிறேன். அத்துடன், என் எண்ணங்கள் வெளிநாட்டில் கல்விகற்கும் மற்றும் பணிபுரியும் நோர்வீயியர்கள் மீதும் உள்ளன. நீங்கள் இன்றிரவு உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இருக்க விரும்பி இருப்பீர்கள். நீங்கள் விரும்பி சேர்ந்து இருக்க விரும்பும் ஒருவரை இழக்கிறீர்கள், என்பதையும் நான் உணர்கிறேன்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனிமையை உணரும் உங்கள் அனைவருக்கும்:
தனிமை என்ற உணர்வைப் பெறுவது நீங்கள் மாத்திரம் இல்லை.
எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சோர்வடைந்தும் அமைதியற்றும் இருக்கும் அனைவருக்கும்:
நான் உங்களை நன்றாகப் புரிந்துகொள்கிறேன்.
இது ஏமாற்றங்கள், நிறுத்தி வைப்புகள் மற்றும் ஒத்திவைப்புகளின் ஆண்டு.
இந்த ஆண்டு நாங்கள் செய்யவேண்டிய பலவற்றை நிறுத்தி வைக்க வேண்டி இருந்த ஆண்டு.
ஆனால் நாம் எதிர்நோக்கி செய்வதற்கு நிறைய இருக்கிறது என்று நம்பலாம்!
நாங்கள் ஒன்றாக ஒரு தொற்றுநோய் பரவல்களின் கீழ் வாழ்கிறோம் – ஆனால் அது நம்மை மிகவும் வித்தியாசமாக பாதித்துள்ளது.
இந்தாண்டு சிலருக்கு, கனவுகள் உடைந்த ஆண்டு, வேலை போய்விட்டது, முன்பு நெருக்கடியில் இருந்தவர்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகிவிட்டது.
மற்றவர்கள் தம் குடும்பம் மிகவும் நெருங்கி ஒன்றாகிவிட்டதையும், தம் சிறிய குடும்ப வாழ்க்கையையும் மெச்சி வாழக் கற்றுக்கொண்டு விட்டோம் என்பதையும் உணர்ந்தார்கள்.
பெரும்பாலான மக்கள், பலதரப்பட்ட பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.
இன்றிரவு நான் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
பிறந்த நாள், பாடசாலை இறுதி ஆண்டு கொண்டாட்டங்கள், திருமண விருந்துகள், நல்ல அரவணைப்புகள் மற்றும் நம் பாரம்பரிய மரபுகளை தள்ளி வைத்ததற்கும் நன்றி.
மாடிவீட்டுத் தாழ்வாரத்தில் இருந்து பாடியதற்கும், முதியவர்களுக்காக அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்குவதற்கும், ஒருவருக்கொருவர் விலகி இருப்பதற்கும் நன்றி – நல்லது நடக்கவேண்டும்.
அனைத்து பேரன் பேத்திகளும் அணைப்பது போலவே எங்கள் பேரக்குழந்தைகளையும் அரவணைப்பதை ராணியும் நானும் தவற விடுகிறோம்.
ஆனால் புதிய ஆண்டில் நாம் நிறைய திரும்பப் பெறுவோம் என்று உள்மனதால் நம்புகிறோம்!
இந்த தை மாதம், நாங்கள் 30 ஆண்டுகளாக மன்னர் மற்றும் ராணியாக இருக்கிறோம். இக்காலம் முழுவதும், நோர்வேவைச் சுற்றி பயணம் செய்வதும், மக்களைச் சந்திப்பதும் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த ஆண்டு எம் மக்களுடன் கூடுவதை நாங்கள் மிகவும் தவற விட்டுவிட்டோம். ஆனால் அதற்கு பதிலாக, எல்லோரையும் போலவே, பிற வழிகளிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம். பிறரைப்போல எங்களுக்கும் பல அஞ்சல்கள் வந்துள்ளன.
எங்கள் மனதை மிகவும் தொட்ட செயலாக, கடந்த வைக்காசி 17 ஆம் திகதி இருத்துள்ளது. தலைநகரில் உள்ள பாடசாலைப் பிள்ளைகளிடமிருந்து, பல ஆயிரம் வரைபடங்கள் மற்றும் வாழ்த்துக்களைப் நாம் பெற்றோம் – ஏனென்றால் அவர்கள் இந்த ஆண்டு அரண்மனையைத் தாண்டி ஊர்வலம் செல்ல முடியவில்லை. நம்மில் பலர் உணர்ந்ததைப் போலவே பல பிள்ளைகளும் தம் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்துள்ளார்கள்:
“நான் சமூக அடிப்படையில் எல்லாவற்றையும் இழக்கிறேன். இது கொஞ்சம் கொடூரமானது “என்று மூன்றாம் வகுப்பு பெண் பிள்ளை ஒருவர் எழுதினார்.
“நான் தனியாக ஒரு மெதுவெதும்பியை வேக வைக்க முடியும், ஆனால் அதை சாப்பிடக்கூடிய நண்பர் ஒருவர் எனக்கு தேவை” என்று மற்றொருவர் எழுதினார்.
நாம் அனைவரும் எட்டு வயது Alva, என்ற பிள்ளை சொல்வதுடன் உடன்படலாம் என்று நினைக்கிறேன்:
“எல்லாம் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறேன்.”
வைகாசி 17 – எல்லாவற்றிற்கும் மேலாக – நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான நாள். இவ்வாண்டு, நாங்கள் கொஞ்சம் கூட இப்படி ஏற்படும் என எண்ணிப் பார்க்கவில்லை. இந்த ஆண்டு நோர்வே செர்மனியரிடமிருந்து, விடுதலை பெற்ற 75 வது ஆண்டு நிறைவைக் குறிப்பதால், நம் நாட்டின் சுதந்திர தினத்தை கொஞ்சம் கூடுதலாக கொண்டாட வேண்டிய காரணமும் இருந்தது. அப்போதே, விடுதலை பெற்ற நாளில் இருந்து எங்கள் மதிப்புகள், நாம் கட்டியெழுப்பிய மற்றும் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கிய அனைத்தும், தற்போது கொரோனாவால் கடினமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நெருக்கடியான காலங்களில் எம்மைச் சுமந்து செல்லும் மக்கள், அரசாங்கம் எங்களிடம் உள்ளது, என்பதை நாங்கள் இப்போது காட்டியுள்ளோம்.
இது அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் – மற்றும் மக்களிடையே ஒருவருக்கொருவரின் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலைகளில், நாங்கள் தைரியத்துடன் செயற்பட்டதையும் கண்டிருக்கிறோம்.
காலப்போக்கில் நமது மதிப்புகளை, ஞானத்துடனும் விவேகத்துடனும் நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தைக் கண்டோம். இது எங்களுக்கு உண்மையிலேயே பொருளாதார முன்னேற்றத்தை வழங்கியுள்ளது.
முழு தொழில்களும் கிட்டத்தட்ட ஒரே இரவில் முடங்கியபோது ஆர்வமான விருப்பத்துடன், படைப்பாற்றல் மற்றும் புதியதாக சிந்திக்கும் திறனை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.
சமூகத்தின் நன்மைக்காக ஒருவருக்கொருவர், எம்மை நாமே தியாகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்பதைக் காட்டியுள்ளோம்.
நோர்வே மற்றும் உலகத்தைப் பொறுத்தளவில் – நாங்கள் ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். ஆனால் இந்த நெருக்கடிகள், அவை வேதனையாக இருந்தாலும் கூட – நல்ல மற்றும் அவசியமான மாற்றங்களை – ஏற்படுத்த கட்டாயப்படுத்துகின்றன.
இப்படியான நெருக்கடிகளை வரலாறு காலாகாலமாக மீண்டும்மீண்டும் நமக்குக் காட்டியுள்ளது.
பூமியில் மிகவும் மாசுபட்டிருந்த சில இடங்கள், இந்த குறுகிய காலத்தில் நீல வானங்களையும் தெளிவான நீரையும் பார்த்தோம். இந்தக் காட்சியை எங்களுடன் தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.
இது நம்பிக்கையைத் தருகிறது, வாய்ப்புகளைக் காட்டுகிறது – அதே நேரத்தில் எங்களுக்கு ஒரு பொறுப்பையும் தருகிறது.
எனவே, என் அன்புள்ள அனைத்து மக்களே! அடுத்து, இப்பாதை எங்கு செல்கிறது?
நிச்சயமற்ற தன்மை மற்றும் துன்பங்களுடன், ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு எம் நம்பிக்கையும் ஓர் நல்ல காரணமாக இருக்கலாம்.
கொரோனா தடுப்பூசிகள் முழு உலகிற்கும் நம்பிக்கையைத் தருகின்றன.
அதே சமயம் தொற்று நோய், நமது சமுதாயத்தின் பெரும்பகுதி மற்றும் வணிகத்திற்கு இன்னும் கடினமான காலமாக இருக்கும். நாம் இன்னும் ஒரு அசாதாரண அன்றாட வாழ்க்கையை அனுபவிப்போம். இதில் பயமாகவும், சோகமாகவும், அவநம்பிக்கையுடனும் இருப்பதை அனுமதிக்கப்படுகிறது.
நாம் எமக்குள்ளும் மற்றவர்களுடனும் – ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும். ஒரு நாளிலேயே நம் அனைவரின் மனநிலையும் தைரியமும் மாறுபடலாம். இது முற்றிலும் இயற்கையானது.
இந்த ஆண்டின் இறுதியில் “தன்னார்வலர்” என்ற வார்த்தையால் அழைக்கப்பட்ட, பலர் சோர்வடைந்து விட்டதாக நான் நினைக்கிறேன். வழக்கமாக, தன்னார்வத் தொண்டு என்பது, சமூகத்தில் ஒரு பொதுப்பணியை எடுத்துக்கொள்வது, அப்பணியை கூட்டாக முயற்சி செய்தபின் திருப்தி அடைவது. இது ஒரு குவளை, குழம்பி மற்றும் சிற்றூண்டியுடன் முடிவடையும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில், மரதன் ஓட்டத்தை போன்ற ஒரு தன்னார்வ பொதுப்பணித் தொண்டை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பித்தும் முடித்தும் வைக்கும் பணியில் ஈடுபடுகிறோம். ஆனால் முன்பு இதுபோல் ஈடுபட்டு பழக்கமில்லை.
ஆனாலும், அன்பர்களே: இப்போதும் கடந்த காலங்களிலும் – ஒன்றிணைந்த ஒன்றை துல்லியமாக அடைவதற்கு, இந்தத் திறமையே நமக்கு உதவியது. இப்போது நம்மிலும் நம் சமூகத்திலும் – எமக்குள் அறிந்திருக்க முடியாத, இந்த புதிய சக்திகளை நாம் வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.
நாம் ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும்.
எங்கள் குழந்தைகள் மற்றும் இளையோர்கள் மீது எனக்கு பிரத்தியேகமாக அக்கறை உள்ளது.
குழந்தைகள் மற்றும் இளையோர்களை கவனிக்கும் இடைவெளி அதிகரித்து வரும்போது, காணமுடியாதளவு நிறைய தனிமையையும் வேதனையையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.
பாதிக்கப்படக்கூடிய இளையோர்கள் தங்கள் வலையமைப்பை, அதாவது பயிற்சியாளர், ஆசிரியர், நண்பரின் தந்தை – ஆகியோர்களைப் பார்க்க முற்படுபவதை இழக்கும்போது கூடுதல் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இப்போது நாம் ஒருவருக்கொருவர் “ஒன்றாக” இருக்க வேண்டும். ஒருவரையொருவர் தொலைபேசி மூலம் அழைப்பை எடுத்து நலம் கேட்கவேண்டும். தம் வாழ்க்கை ஏதோவிதத்தில் தம்மிடமிருந்து விலகிச் செல்கிறது என்று நினைக்கும் பலர் இப்போது நம் நாட்டில் உள்ளனர். இளையோர்களும் வயதானவர்களும் தங்களுக்கு வாழ்க்கை மோசமாக இருப்பதாக நினைக்கிறார்கள்:
இளையோர்களைப் பொறுத்தவரையில், சமூக தொடர்பு இல்லாத வெற்றிடம் முற்றிலும் அவர்களின் வழமைக்கு மாறானது.
வயதானவர்களைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு பெறுமதியான நாளாகும்.
நாங்கள் பொறுத்துக்கொண்டு, நம் வாழ் நாட்களை எங்களால் முடிந்தவரையில் சகித்துக்கொண்டே வாழ்ந்தால், இந்த நெருக்கடி நீங்கிய பிறகு, எங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான ஒன்றை நாங்கள் கற்றுக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன்:
முன்பு நம் அன்றாட வாழ்க்கை உண்மையில் எவ்வளவு சிறந்தது என்பதை நம்மில் பலர் அங்கீகரித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் அனைத்து வழமையான நல் வாழ்க்கையை நாங்கள் மிகவும் இழக்கின்றோம் அல்லவா?
நாங்கள் மேற்கொண்டு வந்த நல்ல, வழக்கமான வேலைகள் மற்றும் செயல்பாடுகளை இழக்கிறோம். நண்பர்கள், சகாக்கள் மற்றும் குடும்பத்தினருடன் கூடி மகிழ்தல். மேலும் கலாச்சார மண்டபத்தில் அல்லது ஒரு கால்பந்து மைதானத்தில் பகிரப்பட்ட அனுபவங்களை நினைத்து எம்மை உற்சாகப்படுத்த அனுமதியுங்கள்.
நாங்கள் பல மகிழ்ச்சியான இடங்களை இழக்கிறோம்: அதாவது குழம்பி தயாரிக்கும் இயந்திரத்தின் அருகே ஒரு அரட்டை, கடைக்குப்போனால் பொதுவாக கூடிப்பேசுவது. இதுபோல் எங்களுக்கிடையில் மதிப்புமிக்க சந்திப்புகள் நடைபெறுவது பெரும்பாலும் இடைவேளை நேரங்களில்தான்.
இந்த நெருக்கடியால், வேறு முக்கியமான ஒன்றையும் – தனிநபர்களாகவும் ஒரு தேசமாகவும் நாங்கள் கற்றுக்கொண்டோம்: அதாவது நாம் நினைப்பதை விட அதிகமான துன்பங்களை பொறுத்துக்கொள்கிறோம். இது எம் உள் மனதில் பாதுகாப்பு மற்றும் வலிமையை எமக்கு வழங்குகிறது. அடுத்த பெரும் சோதனைகள் வரும்போது இதை நாம் மனதில் வைத்திருப்போம்.
என் அன்பானவர்களே;
எல்லாம் சரியாகிவிடும், அல்லது எல்லாம் முன்பு போலவே வரும் என்று என்னால் சொல்ல முடியாது.
ஒரு சிறுவன் அஞ்சலில் என்னிடம் கேட்டார்: “Harald மன்னரே, உங்களுக்கு நூறு வயதுக்கு மேலாகிவிட்டதா?” இதற்கு நான் பதிலளிக்க முடியும்: இல்லை, எனக்கு அவ்வளவு வயதாகவில்லை. ஆனால் நான் ஓர் நீண்ட கால வாழ்க்கையில் நிறைய ஈடுபட்டுள்ளேன், இதை நான் உங்களுக்கு சத்தியம் செய்ய முடியும்:
இப்போது நமக்கு இருக்கும் நெருக்கடிகளும் கடந்து போகும்.
இதற்கு முன்னர் நாங்கள் பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம்.
ஒரு நாள் நாம் திரும்பிப் பார்த்து ஒருவரையொருவர் கேட்போம்:
எப்படி இந் நெருக்கடியை சமாளித்தோம் என?
நாம் ஒவ்வொருவரையும், நம் சமூகத்தையும், நமது சனநாயகத்தையும் – அதாவது, இவை எல்லாவற்றையும் சிறப்பாகப் பயன்படுத்தியதால், கொரோனா நெருக்கடியை நாங்கள் சமாளித்தோம் என்பதை நாமே அறிந்து கொள்வோம்.
நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடாததால், நெருக்கடிகளை கடந்து வந்துள்ளோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை இருக்கிறது, ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது.
நம்பிக்கை என்பது எமது விருப்பம், நம்பிக்கை என்பது நாம் செய்யும் செயல்.
நம் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்து அதைப் பின்பற்றுவதே நம்பிக்கையாகும்.
நம்பிக்கை நம் அனைவரையும் 2021 க்குள் கொண்டு செல்லும்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!