மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான சிறப்பு அறிவித்தல்!

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான சிறப்பு அறிவித்தல்!

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான சிறப்பு அறிவித்தல்!

அன்பிற்கினிய பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும்,

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மகிழ்ச்சியுடன் ஒரு முக்கியமான செய்தியை அறியத் தருகிறது!

எமது மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வத்துடனும் எளிமையாகவும் கற்றுத் தமது மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தை உறுதியாகப் பேணும் நோக்கில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் புதிய பாடத்திட்டமும் அதற்கேற்ற புதிய பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வருகின்ற கல்வியாண்டு (2026-2027) முதல் 5ஆம் வகுப்பு தொடக்கம் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்நூல்கள் தற்போதைய தலைமுறை மாணவர்களின் மொழித்திறன், கற்றல் சூழல் மற்றும் வாழ்வியல் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய பாடநூல்களின் முக்கிய விடயங்கள்:

  • மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையிலான பாட அமைப்பு.
  • ⁠நோர்வேயில் வளர்ந்து வரும் மாணவர்களின் கற்றல் சூழலுக்கு ஏற்ற உள்ளடக்கம்.
  • ⁠மொழி, பண்பாடு மற்றும் தமிழர் அடையாளத்தை வலுப்படுத்தும் பாடங்கள்.
  • ⁠செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறைகள்.
  • ⁠நவீன கல்வியியல் அணுகுமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்.

இத்துடன், எமது "கற்பகம்" இணையவழிக் கற்றல் தளமும் புதிய பாடநூல்களுடன் இணைந்து மாணவர்களின் மொழித்திறன் மற்றும் கற்றல் அனுபவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய பாடநூல்கள், பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் வழங்கிய பட்டறிவுகள், பெற்றோர்களின் கருத்துகள், கல்வியாளர்களின் ஆலோசனைகள் மற்றும் மாணவர்களின் தேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியில் அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைத்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பிற்கினிய பெற்றோர்களே,

புதிய பாடநூல்களை மாணவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பயன்படுத்தி தமிழ்மொழிக் கல்வியில் மேலும் சிறந்து விளங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை எமக்கு உள்ளது.

புதிய பாடநூல்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னரும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தேவையான திருத்தங்களும் மேம்பாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இந்த உயரிய கல்விப் பயணத்தில் தொடர்ந்து தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

 

«தமிழ் எங்கள் அடையாளம்»

தலைமை நிர்வாகம்

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்